பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்! இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாதாம்!
இதுதான் மகாபாரதம் காட்டும் தருமம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை

சென்னை, ஜன. 6- பெண்கள் இரண்டு வரத்துக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகாபாரதம் காட்டும் தருமம் பற்றி கேள்வி எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள்
9 ஆவது இயலினுடைய 32 ஆவது பாடல் சொல்லு கிறது; கிருஷ்ணன் சொல்கிறார்:
யாருக்கெல்லாம் நான் என்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு போவேன் என்றால், பாவ யோனியில் பிறந்த பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் (சூத்திரர்கள்) ஆகி யோரும்கூட என்னிடத்திலே வந்தால், அவர்கள் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு நான் உதவி செய்வேன்.
சரி, இந்த இடத்திலே அவர்கள் விடை சொல்ல வேண்டும். அது குண தருமத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், பாவயோனியில் பிறந்த என்று சொன்னால், அது பிறப்பின் அடிப்படை என்பதை அவர்கள் மறைமுகமாக சொல்கிறார்களா, இல்லையா?
இதையும் தாண்டி, 18 ஆவது இயல்; அதுதான் கடைசி இயல். அங்கே போகிறபொழுதுதான், கொலையை அங்கீ கரிக்கின்ற ஒரு இடத்தை நாம் பார்க்கிறோம்.
அந்த 18 ஆவது இயலில்தான் கிருஷ்ணன் சொல்கிறார்,
ஆணவம் இல்லாத, தூய அறிவுடையவர்கள் செய்யும் எந்த ஒரு கொலையும் அவர்கள் உலகம் முழுவதையும் எதிர்த்தாலும், கொலை செய்தாலும் அது கொலையாகாது! அந்தக் கொலைக்கு அவர்கள் இணக்கமானவர்களாகவும் ஆக மாட்டார்கள் என்று சொல்லுகிற, வன்முறையைத் தூண்டுகிற கருத்தாக அது இருக்கிறது.
பார்ப்பானுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அதற்கும் அடுத்ததாக வருகிற அந்தப் 18 ஆவது இயலில், 41 ஆவது பாடலில் இருந்து 47 ஆவது பாடல் வரை எல்லாம் தெளிவாக, வெட்ட வெளிச்சமாகி விடு கிறது. பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இந்த நான்கு வருணம் எல்லாம் தாண்டி, குணம் தாண்டி, சுபாவம் தாண்டி, கருமம் தாண்டி பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று அந்தப் பெயர்களோடு அவை சொல்லப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, யார் யாருக்கு என்ன என்ன கடமை? எது அவரவர்க்கு உரிய கருமம்? என்று 44 ஆவது இயலில் இருந்து 47 ஆவது இயல் வரை சொல்லப்படும்பொழுது, மிகத்தெளிவாக, இவனுடைய - பார்ப்பானுடைய கருமம்; அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் என்ன?
அவனுக்குத் தவம் செய்வது, படிப்பது!
அடுத்தது சத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வீரம் உடையவனாக இருப்பது; எக்காரணம் கொண்டும், போரில் புறங்காட்டாமல் இருப்பது.
வைசியனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் - வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகியன.
சூத்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தருமம் எது வென்று கேட்டால், மேலே சொல்லப்பட்டிருக்கின்ற மூவருக்குமான ஏவல் செய்வதுதான்.
அப்படியிருந்தால், அதையெல்லாம் நீக்கிவிடலாமாம்!
இதனைச் சொல்லி முடித்ததற்குப் பிறகு, இதை நான் அந்தத் தொலைக்காட்சியில் கேட்டேன். நான் அதிகாரத் தைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேட்டேன், இதற்கு என்ன விடை? என்று.
அதற்கு மிக புத்திசாலியான ஊடகவியலாளர் சுதாங் கன் அவர்கள் சொன்னார், அப்படியிருந்தால், அதை யெல்லாம் நீக்கிவிடலாம் என்று.
அதாவது, அது இல்லை என்று அவர் சொல்லவில்லை. அப்பொழுது எனக்கு தருமியின் நினைவுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது. என்னுடைய பாட்டில் எவ்வளவு தவறு இருக்கிறதோ, அதனைக் குறைத்துக்கொண்டு மீதியைக் கொடுங்கள் என்பதுபோல, வேண்டியதை வைத்துக்கொண்டு, வேண்டாததை வெட்டிவிடுங்கள் என்று.
ஏதோ, கீதையில் சேர்ப்பதற்கும், வெட்டுவதற்கும் இவர் தான் அதற்கான முழு அதிகாரம் உடையவர் என்பதுபோல, தொலைக்காட்சி நிகழ்வின்போது, தப்பாக இருந்தால், அதனை வெட்டி விடலாம் என்று சொல்கிறார்.
மிகத் தெளிவான இரண்டாவது இயல் தொடங்குகிற பொழுது, மிக நல்ல பிள்ளைபோல் தொடங்கி, 18 ஆவது இயலுக்கு வருகிறபொழுது, வெட்ட வெளிச்சமாக, இந்த நான்கு வருணங்களில், இவன்தான் வேலை இருக்கிறவன்; இவனுக்கு இதுதான் வேலை. இங்கே இருக்கின்ற சூத்திர னுக்கு இதுதான் கடமை என்று சொல்லிவிட்டு, இப்பொழுது இரண்டையும் நீங்கள் இணைத்துப் பாருங்கள்;
அவனவனுக்கு உள்ள கருமம் என்று எது என்று சொன்னதற்குப் பிறகு, மறுபடியும் இரண்டாவது இயலுக்குப் போனால், நீங்கள் பயன் கருதா கருமம் செய்யவேண்டும்.
இந்தக் கருமத்தையும்கூட, எந்த எதிர்பார்ப்பும் இல்லா மல் செய்யவேண்டும். இந்தக் கருமம் என்ற சொல்லை, நடைமுறையில் சரியாகத்தான் சொல்கிறான்.
கீதையில் சொல்கின்ற பொருள் வேறாக இருந்தாலும், இவன் சொல்கின்ற இந்தக் கருமத்தையும் நாம் என்ன செய்யவேண்டும் என்றால், எதையும் எதிர்பார்க்காமல் செய்யவேண்டும் என்று, நீ கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்குச் சென்றேன்; அங்கு ரஜினிகாந்த் அதனை உணர்ந்து எழுதியிருக் கிறாரா? அல்லது வேறு ஏதாவது மறுப்பாக எழுதி யிருக்கிறாரா? என்பது எனக்குத் தெரியாது.
கடமையைச் செய்! பலனை எதிர்பார்! என்று எழுதி யிருக்கிறார். இன்றைக்கும் அதனை நீங்கள் அங்கே பார்க்கலாம்!
எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்!
கடமையைச் செய்! பயனை எதிர்பார்க்காதே! நீ வேலை செய்வதற்காக மட்டுமே பிறந்தவன். ஏவல் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டுமே தவிர, நீ எந்தப் பயனையும் எதிர்பார்க்கக்கூடாது என்றுதான், இரண்டாவது அத்தியாயத்தில் இருக்கின்ற அந்த வரிக்கு என்ன பொருள் என்றால், இதுதான் உன் கருமம்! இன்னமும் கீதை விளக்க மாகச் சொல்கிறது.
நீ உன் வருணத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணியைவிட, இன்னொரு வருணத்தாருக்கு உரிய பணியை சிறப்பாகச் செய்வாய் என்றாலும்கூட, அதை நீ செய்யக் கூடாது. உனக்கு அரைகுறையாகத்தான் தெரியும் என்றா லும், எது உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் செய்யவேண்டும்.
யார் விதித்தார்? மயாசிருஷ்டம், அதை நான் தான் விதித்தேன் என்று கிருஷ்ணன் சொல்கிறார்.
இதில் என்ன செய்தியை நாம் பார்க்கவேண்டும் என்றால், இடைச்செருகல்தான் இந்த பகவத் கீதை என்ப தற்கு ஒரு மிகச் சரியான எடுத்துக்காட்டை அம்பேத்கர் தன்னுடைய புத்தகத்தில் காட்டுகிறார்.
The Revolution and Counter Revolution in ancient India என்கிற பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர் புரட்சியும் என்கிற புத்தகத்தில் அவர் ஒன்றைச் சொல்கிறார்:
பகவத் கீதையிலேதான் கிருஷ்ணன் எல்லோரையும் விட மேலானவராக அவர்தான் எல்லாம். ஆக்கமும் நானே, அழிவும் நானே! நீ செய்கின்ற புண்ணியம், பாவம் எல்லாம் என்னிடத்திலேதான் வந்து சேரும் என்று The Supreme God என்று சொல்கிற, எல்லாவற்றிற்கும் மேலான ஒரு இடத்தில் கிருஷ்ணர் உயர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாரே, இது இயல்பான மகாபாரதத்தினுடைய கதைப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.
மற்ற இயல்களில் நீங்கள் பார்த்தால், அங்கே கிருஷ் ணனின் நிலைமை மகாபாரதத்தில் என்னவாக இருக்கிறது.
அதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் காட்டுகிறார். மகாபாரதம் 18 பருவங்களை உடையது. அதில் முதல் பருவம் ஆதிபருவம். இங்கே இருக்கின்ற நண்பர்கள், இளைஞர்கள் யாரும் மகாபாரதம் படிக்கவில்லை என்றால், உங்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன். படிக்கலாம் என்று நினைத்தால்கூட ஆதிபருவத்தை விட்டுவிட்டுப் படியுங்கள்; ஆதிபருவத்தைப் படிக்கின்ற எந்தப் பையனும் உருப்படமாட்டான். ஆதிபருவத்தைப் படிக்க ஆரம்பித்து, முடிக்கும் தருவாயில் எவனாக இருந்தாலும் காம உணர்ச்சியை அவனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையாகிவிடும்.
இவர்கள் சொல்லி வைத்திருக்கின்ற பல புராணக் கதைகளில் எல்லாமே இப்படித்தான். எந்தக் கதையுமே நாம் சொல்லவில்லை.
தலை என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு!
நான் பல கூட்டங்களில் கேட்டிருக்கிறேன், ஆக்குகிற கடவுள், காக்கிற கடவுள், அழிக்கின்ற கடவுள் எல்லாவற் றையும் சொல்லுகிறாய்; காக்கும் கடவுளுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; அழிக்கின்ற கடவுள் சிவனுக்குக் கோவில் வைத்திருக்கிறீர்கள்; ஏன் ஆக்குகிற கடவுளான பிரம்மனுக்குக் கோவில் இல்லை. கும்பகோணத்தில் மட்டும்தான் உள்ளது. வேறு எங்கேயும் இல்லை என்றால், சிவபெருமான் வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன் வைக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்.
பிரம்மனுக்கு அடிப்படையில் அய்ந்து தலைகள்; ஆனால், இப்பொழுது இருப்பது நான்கு தலைகள்தான். சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி விட்டார். அது என்ன நெல்லிக்காயா? கிள்ளி எறிவதற்கு.
ஏன் கிள்ளி எறிந்துவிட்டார் என்றால், வேறு ஒரு காரணமும் இல்லை. பார்வதி பிரம்மனுக்கு அத்தை முறை. பார்வதி குளித்துக் கொண்டிருக்கும்பொழுது, பிரம்மன் எட்டிப் பார்த்ததை, சிவபெருமான் பார்த்துவிட்டாராம்.
ஏனய்யா, ஒரு கடவுள் செய்கின்ற காரியமா இவை யெல்லாம். இந்தக் கதையை நாங்களா எழுதினோம்; இந்தக் கதை முழுவதையும் நீங்கள்தான் எழுதி வைத்திருக் கிறீர்கள். ஒரு கடவுளைப்பற்றிய கதையைப் படிக்கின்ற பொழுது, மனதில் ஒரு நெகிழ்ச்சி வரவேண்டாமா?
அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற சபா பருவம்!
படிக்கின்ற பொழுதே, என்னடா, இது இவ்வளவு மோசமாக இருக்கிறதே - அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாக மகாபாரதத்திலும் உண்டு. அந்த மகாபாரதத்தில் இருக்கின்ற ஆதிபருவம். அதனைத் தாண்டி வந்தால், இரண்டாவது பருவம் சபா பருவம். பிறகு ஆரண்ய பருவம்; விராட பருவம். சபா பருவத்தில் அம்பேத்கர் எடுத்துச் சொல்கின்ற காட்சி எது என்று கேட்டால், சபா பருவத்தில் ஒரு விருந்துக்கு தருமன், முதல் மரியாதையாக கிருஷ்ணனை அழைக்கின்றபொழுது, சிசுபாலன் என்கின்ற ஒரு சாதாரண பாத்திரம், மிகக் கடுமையாக கிருஷ்ணனை விமர்சனம் செய்கிறார். இது மகாபாரதத்தில் இருக்கிறது.
நீ கிருஷ்ணனுடைய உயரத்தை கீதையில் காட்டுவதற் கும், சிசுபாலன் அவ்வளவு கோபப்பட்டு, அவ்வளவு குறைவாக சபா பருவத்தில் கிருஷ்ணனை தருமன் முன்னிலையில் பேசுவதற்கும் இருக்கின்ற வேறுபாட்டை அம்பேத்கர் கேட்பார், அவ்வளவு பெரிய பாத்திரத்தை இப்படி ஒருவன், சாதாரணமான ஒரு மன்னன், அப்படி பேச முடியுமா?
சிசுபாலனுக்கு கிருஷ்ணனின்மேல் இருந்த கோபம் நியாயமானது. எதற்காக கிருஷ்ணன்மீது சிசுபாலன் கோபப்பட்டான் என்றால், சிசுபாலனுக்குப் பார்த்து வைத்திருந்த, அந்த ருக்மணி என்ற பெண், மண மேடையில் இருக்கின்றபொழுதுதான், கிருஷ்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்து ருக்மணியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். இதனால், சிசுபாலனுக்குக் கிருஷ்ணனின்மேல் கோபம் இருக்குமா, இருக்காதா?
கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான்!
எனவே, தன் மனைவியை, தனக்கு மனைவியாக மண மேடையில் உட்கார்ந்திருந்த பெண்ணை, தூக்கிக் கொண்டு போய், ருக்மணியை மணந்துகொண்டு, அதற்குப் பிறகு ஏழு பெண்களை மணந்துகொண்டு, இதில் என்ன சிறப்பு என்றால், அந்த ஏழு பெண்களும் ஏற்கெனவே திருமணமானவர்கள். அதற்குப் பிறகு 10 ஆயிரம் கோபியர்கள்; இத்தனை பேரையும் விட்டுவிட்டு, கண்ணன் யாரைக் காதலித்தான் என்றால், ராதாவைத்தான் காதலித்தார்.
ஏன்டா, இத்தனை பேர்களுக்கு அப்புறம், ராதாவைக் காதலிக்கலாமா? நம்மாள் இன்றைக்கும் ருக்மணி கிருஷ் ணன் என்று யாராவது பெயர் வைக்கிறானா? ராதா கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைக்கிறார்கள். நண்பர் களே, ஒருவேளை கல்யாணம் செய்தால், நம்மாள்களுக்குப் பிடிக்காதோ, என்னவோ, தெரியவில்லை!
எனவே, ராதாகிருஷ்ணன்கள் செய்த அந்த செயல்களையெல்லாம் மிகக் கடுமையாக சிசுபாலன் பேசு கின்ற அந்தக் காட்சி மகாபாரதத்திலேயே இடம்பெற்றிருக் கிறது.
தருமம் என்று சொல்வதற்குப் பொதுவாக நாம் வைத்திருக்கின்ற பொருளைப் புரட்டிப் பார்க்கக்கூடாது. வள்ளுவன் சொல்லுகின்ற அறம் வேறு; அறம் என்பதற்கு இவர்களுடைய தருமம் என்கிற சொல் ஒருநாளும் பொருந்தாது. அந்த அறத்திற்கும், இந்த தருமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காரணம், நீங்கள் தருமன் என்கிற பாத்திரம் இருக் கிறதே, அந்தப் பாத்திரம்தான், மகாபாரதத்தினுடைய அத்தனை விதமான இடர்களுக்கும் அடிப்படைக் காரணம். நான் இங்கே சொல்கின்ற இந்தச் செய்தியை, ஒருமுறை கலைஞர் தொலைக்காட்சியில் கூறியபொழுது, அன் றைக்கு உண்மையிலேயே வழக்கமாக வருவதைவிட, ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள். அப்படியா? என்று கேட்டார்கள். அப்படி கேட்டவர்கள் எல்லோரும் பக்தர்கள்.
நான் மகாபாரதத்தில் இருக்கின்ற கதையைத்தான் சொன்னேன். தருமன் சூதாடி எல்லாவற்றையும் இழந்தான் என்பதுதான் பொதுவாக அறியப்பட்டிருக்கின்ற செய்தி.
ஆனால், அவன் முதல்முறை சூதாடி, எல்லாவற்றை யும் இழக்கவில்லை என்பது அழுத்தமாக நான் சொன்ன செய்தி.
ஆனால், அவன் முதல்முறை சூதாடி, எல்லாவற்றை யும் இழக்கவில்லை என்பது அழுத்தமாக நான் சொன்ன செய்தி.
தருமன் சூதாடினான்; எல்லா தம்பிகளையும் இழந்தான்; சொத்து சுகங்களை இழந்தான்; படைகளை இழந்தான்; கடைசியாக துரோபதையை இழந்தான். துரோபதையை இழந்ததற்குப் பிறகு, துரோபதி அரங்கத்திற்கு வந்து, பீஷ்மர் உள்பட அத்தனை பேரும் இருக்கின்ற சபையில், ஒரு கேள்வியை, பாஞ்சாலி கேட்டாள்.
பாஞ்சாலி கேட்ட கேள்வி!
தருமன் என்னை பணயம் வைத்து இழந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் தன்னை இழந்த பின் என்னை இழந்தானா? அல்லது என்னை இழந்த பின் தன்னை இழந் தானா? என்று கேட்டாள்.
அந்தக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்களும், அழுத் தங்களும் இருக்கின்றது.
தன்னை இழந்த பின்தான் உன்னை இழந்தான் என்றவுடன், மறுபடியும் பாஞ்சாலி கேட்டாள்,
அவன் தன்னையே இழந்த பிறகு, என்னை இழப்பதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அவன் தன்னையே இழந்த பிறகு, என்னை இழப்பதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடிப்படையில் அவனே அடிமையான பிறகு, இன் னொருவரை எப்படி அவன் பணயம் வைத்து விளையாட முடியும்?
அதற்கு அந்த அரங்கில் யாரும் விடை சொல்ல வில்லை. பிதாமகர் என்று சொல்லப்படுகிற பீஷ்மர் சொன்னார், மகாபாரதத்தில் இருக்கிறது நண்பர்களே, குறிப்பாக நம் வீட்டில் போய் சொல்லுங்கள்.
பீஷ்மர் சொன்னார், ஆண் அடிமையாக ஆனாலும், மடையனாக இருந்தாலும், அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவன் மனைவி அவனுக்கு அடிமைதான்.
மகாபாரதம் சொல்லித் தருகின்ற சமூக வாழ்வில் செய்தி இதுதான்
மகாபாரதம் சொல்லித் தருகின்ற சமூக வாழ்வில் செய்தி இதுதான்
உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு
ஒருவன் ஆண் மன்னனாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், அடிமையாக இருந்தாலும், எந்த நிலையில் ஆண் இருந்தாலும், அவன் மனைவி அவனுக்கு அடிமைதான். எனவே, உன்னைப் பணயம் வைப்பதற்கு அவனுக்கு உரிமை உண்டு என்று பீஷ்மர் சொன்னார்.
எல்லாம் இழந்த பிறகு, என்ன நடந்தது என்றால், திருதராஷ்டிரன், துரியோதனிடம் சொன்னான், இது நியாயமில்லை. ஒருவனை சூதாட்டத்திற்கு அழைத்து, எல்லாவற்றையும் தொலைத்துவிட்டுப் போ என்று சொல்ல முடியாது. துரோபதியை, அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணாக அனுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், தடுத்து நிறுத்தி, வேண்டாம், பாஞ்சாலி; நீ என்னிடத்தில் இரண்டு வரம் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னான்.
இது மகாபாரதத்தில் உள்ள காட்சி.
பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது!
பாஞ்சாலி வரம் கேட்டாள்; முதல் வரம், தருமனை விடுவிங்கள் என்றாள்.
திருதராஷ்டிரன், விடுவித்தோம் என்றான்.
இரண்டாவது வரம் கேள் என்று கேட்டான்;
தம்பியர்களையும் விடுவியுங்கள் என்றாள்.
விடுவித்தேன் என்று சொன்னான். மூன்றாவது வரமும் கேள் என்று திருதராஷ்டிரன் சொன்னபொழுது,
பாஞ்சாலி சொன்னாள், இல்லை இல்லை பெண்கள் இரண்டு வரத்திற்குமேல் கேட்கக்கூடாது என்று.
திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா?
அப்படியும் திருதராஷ்டிரன், இல்லை இல்லை, நானாகவே வரம் தருகிறேன். கைப்பற்றிய எல்லாவற் றையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம். படை, நாடு, செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நீங்கள் ஊர் திரும்பலாம் என்று சொன்ன திருதராஷ்டிரன் நல்ல மனிதனா? சூதாடிய தருமன் நல்ல மனிதனா? நண்பர்களே, நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
என்ன நடந்தது என்றால், அதற்குப் பிறகு இவர்கள் போய்க் கொண்டிருக்கின்றபொழுது, சகுனி துரியோதனை அழைத்து, இப்படி நீ அவர்களை அனுப்பி விட்டாயே! அவர்கள் சபதம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள்; என்றைக்கு இருந்தாலும் உனக்கு ஆபத்து என்கிறார்.
என்ன செய்யலாம் மாமா என்கிறான் துரியோதனன்.
மறுபடியும் சூதாட்டத்திற்கு அழைக்கலாம் என்கிறான் சகுனி.
எப்படி வருவான்? மனநிலை சரியாக இருக்கின்ற எவனாவது வருவானா?
ஆனால், சகுனி சொன்னான், எவன் வருவானோ இல்லையோ, தருமன் வருவான்.
சகுனி சொன்ன அந்த செய்தி இருக்கிறது. சூதாட்டம் என்றால், தருமனுக்கு அவ்வளவு பிரியம். பாருங்கள் தருமன் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்!
சூதாட்டத்தில் தருமனுக்கு அத்தனை ஆசை உண்டு. மறுபடியும் அழைத்தால் வருவான்.
திருதராஷ்டிரன் மறுபடியும் பாண்டவர்களை அழைக்கக்கூடாது என்கிறபொழுது,
இல்லை, இல்லை, மறுபடியும் நாங்கள் எதையும் பணயமாக வைக்கச் சொல்லவில்லை. ஒரே ஒரு நிபந்தனையை வைக்கிறோம். தோற்றுப் போகிறவர்கள், 12 ஆண்டுகள் காட்டுக்குப் போகவேண்டும். ஒரு ஆண்டு அஞ்ஞான வாசம்; மறைமுகமாக, தலைமறைவாக இருக்கவேண்டும். இதுதான் பந்தயம்; வேறு எதையும் இழக்கச் சொல்லவில்லை என்று சொல்லி,
மறுபடியும், போகிற பாதையில், அவர்கள் ஊர் போய்ச் சேரவில்லை. போகிற பாதையில், உங்களை மறுபடியும் சூதாட அழைக்கிறார்கள் என்றவுடன், திரும்பி வந்தவ னுக்குப் பெயர்தான் தருமன் என்பது. இதுதான் தருமமா? என்று மக்களிடம் கேளுங்கள்.
நல்லதுதான் செய்திருக்கிறான் பாரதீய ஜனதா. நாம் சும்மா இவையெல்லாவற்றையும் பேச முடியுமா? இதை வைத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பேசுவதற்கு, மிக அருமையான வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். மறு படியும் தருமர் வந்து, ஆடித் தோற்றுத்தான், 12 ஆண்டுகள் வனவாசம்; அதுதான் மூன்றாவது பருவம் ஆரண்ய பருவம்.
ஆரண்ய பருவத்தில் என்ன நடந்தது என்று நான் உள்ளே சென்றால், அடுத்து அய்ந்து பேர் இங்கே பேசவேண்டும்; நேரம் இருக்காது.
ஆரண்ய பருவத்தில் என்ன நடந்தது என்று நான் உள்ளே சென்றால், அடுத்து அய்ந்து பேர் இங்கே பேசவேண்டும்; நேரம் இருக்காது.
எனவே, இந்தக் குருசேத்திரம் என்று சொல்லுகின்ற கீதையில் நடந்த யுத்தமே நியாயமற்ற யுத்தம். அதனை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
அந்த யுத்தமே நியாயமற்றது. நீங்கள் எண்ணிப் பாருங்கள், பாண்டவருக்காகத் தூது வந்த கிருஷ்ணன் என்ன கேட்டான்?
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா?
எங்களுக்கு உரிமையான பகுதியை, பாதி நாட்டை கொடு என்றுதானே கேட்கவேண்டும்.
உரிமை உள்ளவன் அப்படித்தான் கேட்பான். ஆனால், கிருஷ்ணன் என்ன கேட்டான்?
அய்ந்து நாடு கொடு; இல்லையென்றால், அய்ந்து ஊர்களைக் கொடு.
எவனாவது உரிமை உள்ளவன் இப்படி கேட்பானா? கிடைத்தவரை லாபம் என்பது இதுதான்.
அய்யா பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பனியம் என்பதே பலித்தவரை என்று. பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம்.
அய்யா பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பனியம் என்பதே பலித்தவரை என்று. பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம்.
அய்ந்து நாடு கொடு; இல்லை அய்ந்து வீடாவது கொடு; இல்லை அய்ந்து டம்ளராவது கொடு என்பது என்ன நியாயம்?
ஏன் அப்படி கேட்டார்கள் என்றால், அந்த நாடு எந்த விதத்திலும் பாண்டவர்களுக்கு உரியது அல்ல.
திருதராஷ்டனின் தம்பி பாண்டுவாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்வதைக் கேட்டுக் கோபித்துக் கொள்ளக்கூடாது. கர்ணன் உள்பட, எந்தப் பயலும் பாண்டுவுக்குப் பிறக்கவில்லை என்றுதான் மகாபாரதம் சொல்கிறது.
இந்திரனுக்குப் பிறந்தான், சந்திரனுக்குப் பிறந்தான் என்று சொன்னால், அப்புறம் எப்படி அவர்கள் பாண்டவர்கள். பாண்டுவுக்கே பிறக்காதவர்கள், பிறகு எப்படி பாண்டவர்கள். மனைவியைத் தொட்டால், பாண்டுவின் தலை வெடித்துவிடும் என்ற ஒரு சாபத்தை வைத்துத் திரிகின்றான்.
யார் யாருக்கோ பிறந்தவர்களுக்கு இந்த நாடு எப்படி சொந்தமாகும்?
ஆகவே, குருசேத்திரப் போரும் நியாயமில்லை; அதில் இவர்கள் பேசுகின்ற எந்தச் செய்தியும் நியாயமில்லை. முழுக்க முழுக்க வருண அமைப்பை நிலை நிறுத்துகிற வன்முறையைத் தூண்டுகிற ஒரு நூல் தேசிய நூலாக இல்லை, பாட நூலாக இருக்கக் கூடிய தகுதியும் அற்றது என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி சொல்லி, என் உரையை முடிக்கின்றேன்.
- இவ்வாறு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்
Comments
Post a Comment