கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்களுக்கான நூல்
கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா?
சென்னை சிறப்புக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

சென்னை, ஜன. 5- கிருஷ்ணன் லீலைகளை தேசிய விளையாட்டுகளாக அறிவிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.
12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களே, எழுச்சித் தமிழர் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களே, பேராசிரியர், நண்பர் அருணன் அவர்களே, கவிஞர் கலிபூங்குன்றன் அவர் களே, அரங்கில் அமர்ந்திருக்கின்ற பல்துறை சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணனின் விளையாட்டுகளையும், தேசிய விளையாட்டுகளாக அறிவித்தால்...
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் சொன்னதற்குப் பிறகு, அதே வேகத்தில் கிருஷ்ணனின் விளையாட்டுகளை யும், தேசிய விளையாட்டுகளாக அவர்கள் அறிவித்துவிடுவ தற்கு முன்பு, ஒரு வேளை அப்படி அறிவித்தால், அவர்கள் கட்சியில் உள்ள பெண்களே ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை; அந்தச் சாமியார் பெண்கள் உள்பட.
எனவே, அதற்கு முன்பாக, உடனடியாக செயலில் இறங்கிவிடவேண்டும் என்கிற அடிப்படையில் இந்தக் கூட்டத்தை, இது சரியான கூட்டம் என்பதைவிட, சரியான நேரத்தில் கூட்டப்பட்டிருக்கின்ற, எப்பொழுதும்போல பெரியார் திடலிலிருந்து தொடங்குகிற இந்த முதல் பயணத்தில் கலந்துகொள்கின்ற நல்ல வாய்ப்பினை நானும் பெற்றமைக்காக மகிழ்கிறேன்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய் தியை, ஒவ்வொரு விதமான விவாதத்தை அவர்கள் கிளப் பிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இன்னொருவித மான உள்நோக்கம் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைக்கு நான் இந்த அரங்கிற்கு வருவதற்கு முன்புகூட, நாடாளுமன்றத்தில் சாக்ஷி மகராஜ் என்கிற பாரதிய ஜனதா கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர், காந்தியார் எப்படி தேசப் பற்று உடையவரோ, அதுபோல, கோட்சேயும் தேசப்பற்று உடையவர் என்று சொல்லி, பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்பது செய்தி.
காந்தியாரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற அய்யம் வருகிறது
ஒவ்வொரு செய்தியையும் சொல்லுவது, பிறகு திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதை, ஏறத்தாழ இந்த இரண்டு, மூன்று வாரங்களாக அவர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக் கிறார்கள். நமக்கே இப்பொழுதுதான் தெரிகிறது, காந்தியா ரின் தேசப்பற்று அப்படிப்பட்டதா? என்கிற ஒரு பெரிய அய்யம் வருகிறது.
காந்தியாரின் தேசப்பற்றும், கோட்சேயின் தேசப்பற்றும் ஏறத்தாழ ஒரே மாதிரியானதுதான் என்று, நாடாளுமன்றத் தில் சொல்கின்ற அளவிற்கு அவர்கள் இன்றைக்கு வந்திருக்கிறார்கள்.
அதேபோல, ஒவ்வொரு வாரமும், ஒன்று சமஸ்கிருத வாரம், அதற்குப் பிறகு நிரஞ்சன் ஜோதி வாரம், பிறகு அமித்ஷா வாரம், பகவத் கீதை வாரம் என்று தொலைக் காட்சியில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நடிகரின் படத்தைப் போடுவார்களோ அதுபோல, இவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது கீதையின் வாரம்.
5151 ஆம் ஆண்டு விழாவாம்!
இன்றைக்கு அவர்கள் கொண்டு வந்துகொடுத்திருக் கின்ற அந்த செய்தி, அதுவும் எந்த இடத்தில் அது சொல்லப்பட்டிருக்கின்றது என்பது ஒரு முக்கியமான செய்தி. டில்லியில் கொண்டாடப்பட்ட, நீங்கள் கவனமாக கவனிக்கவேண்டும், கீதை எழுதப்பட்ட 5151 ஆம் ஆண்டு விழாவில்.
வரலாற்றுக்கு எந்தவிதமான சான்றுகளும் தேவையில் லையா? வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லுவதெல்லாம் வரலாறா? வரலாற்றுப் பேராசிரியர் அய்யா ராமசாமி அவர்கள் எல்லாம் எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். இப்படி யொரு நகைச்சுவையை அவர்கள் படித்திருக்க முடியாது.
கீதையின் வயது 5151 என்று சொல்லுகிற, எந்தச் சான்றும் தேவையில்லாமல், அதற்கு ஒரு விழாவை டில்லியில் எடுக் கின்ற, அவ்விழாவில், இந்திய அமைச்சர்கள் கலந்துகொள் கின்ற நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதில், இந்தியாவினு டைய அமைச்சர் கலந்துகொள்கின்றபொழுது, கீதையின் வயது 5151, அதற்கு மேற்பட்டது என்பதாக, ஒரு பொய், ஒரு புனைவு வரலாற்று ரீதியாக உண்மையாக ஆக்கப்படுகின்ற முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.
கீதை என்பது ஒரு இடைச்செருகல் நூல் என்றார் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், பல்வேறுவிதமான ஆதாரங்களோடு மிகச் சரியாக, இந்த ஆண்டிலேதான் கீதை இடைச்செருகலாக மகாபாரதத்தில் கொண்டுவந்து திணிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதைக் காட்டுவார். அம்பேத்கர் அவர்கள் காட்டுகின்ற காலம், பால ஆதித்த குப்தனுடைய காலம். அது ஏறத்தாழ கி.பி.500 அல்லது கி.பி.400 இல் வரவேண்டும். பால ஆதித்த குப்தன் காலத்தில் தான், கீதை என்கிற ஒரு நூல் ஒரு இடைச்செருகலாக, பவுத் தத்தினுடைய எழுச்சிக்குப் பிறகு, இங்கே ஜாதிகளினுடைய அந்த இறுக்கம் தளர்ந்து, ஜாதிகளுக்கு எதிரான ஓர் உணர்வு ஏற்பட்ட நேரத்தில், மறுபடியும் ஜாதிகளின் இறுக்கத்தை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. இதனை அம்பேத்கர் அவர்கள் மிகச் சரியாக ஆய்வு செய்து சொல்லியிருக்கின்ற காலம், இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம், நம்முடைய பாடப் புத்தகங்களில் எல்லாம், குப்தர்கள் காலம் பொற்காலம்; நிறுவுக! என்றுதான் கேள்வி கேட்பார்கள்.
பொற்காலம் யாருக்கு? அவாளுக்கு - இந்தியாவிற்கு அல்ல!
அதாவது விடையை அவர்கள் சொல்லிவிட்டு, அதனை நிறுவுவதற்கு நாம் வரவேண்டும். குப்தர்கள் காலம் எப்படிப்பட்டது? என்பது கேள்வி அல்ல. குப்தர் களின் காலம் பொற்காலம், உண்மைதான் குப்தர்களின் காலம் பொற்காலம், ஒரு கேள்வி விடுபட்டு போய்விட்டது. யாருக்கு? என்கிற கேள்வி. குப்தர்களின் காலம் பொற்காலம்; அவாளுக்குப் பொற்காலம்; இந்தியாவிற்கு அல்ல.
எனவே, அவாளின் பொற்காலத்திலேயே திணிக்கப் பட்ட, இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட ஒரு நூல்தான் பகவத் கீதை. 1400, 1500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கலாம்.
டாக்டர் கோசாம்பி அவர்கள், தன்னுடைய வரலாற்று நூலில் எழுதுகின்ற பொழுது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சொல்கிறார். அப்படிப் பார்த்தால், 1700.
வேண்டாம், டி.ஜி.திலகரும், டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் - கீதையைப்பற்றி மிக அதிகமான நூல்களை எழுதி இருக்கின்றவர்கள் நான் நினைக்கிறேன், ஒன்று டாக்டர் இராதாகிருஷ்ணன், இன்னொன்று நம்முடைய தமிழர் தலைவர் அய்யா அவர்கள். இவர்கள் இரண்டு பேரும்தான்.
அண்மையில், ஒரு நாளேட்டில் ஒன்றினை எழுதியிருந் தார்கள்; கீதையைக் காப்பாற்றுங்கள் என்று. அவர்கள் எழுதியிருந்ததன் நோக்கம், இன்றைக்கு இந்த மேடையில் நமக்குப் புரிகிறது. அவர்கள் கீதையை தேசிய நூலாக ஆக்கக் கூடாது என்கிற நோக்கில், அந்தத் தலையங்கம் இல்லை.
ஏன் சும்மா இருக்கின்ற கீதையை, இப்படிச் சொல்லி, ஆளுக்கு ஆள் திட்டுவதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறீர்களே, என்பதுதான் அந்தத் தலையங்கத்தினுடைய அடிப்படை.
பாரதீய ஜனதாவிற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்!
நீங்கள் பார்த்தால், ஒரு 10 நாள்களுக்கு முன்புகூட, கீதையின் மறுபக்கம் நூல் இந்த அளவிற்கு விற்பனை யாகுமா என்பது தெரியாது. கீதையின் மறுபக்கம் நூலை இந்த அளவிற்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கள். அதுமட்டுமல்ல, நான் மேடையில் பார்க்கிறேன், தோழர் தா.பாண்டியன் அவர்களோடு எல்லாம் நீண்ட நெடுநாள்களுக்குப் பிறகு அவரோடு சேர்ந்து மேடையில் பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்காக நாம் பாரதீய ஜனதாவிற்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா!
ஏண்டா, பிரிந்து கிடக்கிறீர்கள்; கறுப்புச் சட்டையும், சிவப்புச் சட்டையும், நீலச் சட்டையும் இனிமேலும் இந்த நாட்டில் பிரிந்திருக்கக் கூடாது என்பதை, பாரதீய ஜனதா கட்சி மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதை இந்த மேடையிலேயே நான் பார்க்கிறேன்.
எனவேதான், கீதையைக் காப்பாற்றுங்கள்! என்று அந்தத் தலைப்பு; தேசிய நூல் என்றெல்லாம் சொல்லி, இதுவரைக் கும், பொதுவாக அறிவுக்களஞ்சியம், பொதுக்களஞ்சியம் என்றெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருந்ததற்கு மாறாக, அது அறிவுக்களஞ்சியம் அல்ல; அது எப்படிப்பட்ட நூல் என்பதை, ஆளாளுக்குப் பேசுவதற்கு ஒரு ஏற்பாடு செய்து விட்டீர்களே, என்கிற கவலையில், கீதையைக் காப்பாற்றுங் கள் என்று ஒரு தலையங்கத்தை நான் பார்த்தேன்.
சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல....
இந்து ஏட்டின் தலையங்கம்கூட, அதுபற்றிய விமர் சனத்தை எழுதியிருந்தது. இப்பொழுது பல்வேறு தொலைக் காட்சிகளில், பகவத் கீதைபற்றிய விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒரு விதத்தில் அது நல்லது. அப்படி விவாதம் நடைபெறுகின்றபொழுதுதான், கீதையைப்பற்றிய ஒரு பொத்தாம் பொதுவான ஒரு எண்ணம் உடைந்து, உள்ளே என்ன இருக்கிறது என்பதை, நம் போன்றோர் எல்லாம் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதற்கு என்ன காரணம், தொலைக்காட்சிகள் நம்மையும் எதற்காக அழைக் கிறார்கள் என்றால், சுப.வீ.யும், அருணனும் வந்து பேச வேண்டும் என்கிற ஆசையினால் அல்ல; விவாதத்திற்கு வேறு தரப்பு ஆட்களும் தேவை என்பதினாலே, அருணை அழைக்கின்ற பொழுதும், என்னை அழைக்கின்ற பொழுதும், நம்முடைய கருத்துடையவர்களை கவிஞரை அழைக்கின்ற பொழுதும், அருள்மொழியை அழைக்கின்ற பொழுதும், கீதையைப்பற்றி இன்னொரு பக்கம் இன் றைக்கு மக்களிடத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு வாசகர் தொலைப்பேசியில் என்னிடத்தில் கேள்வி கேட்டார்!
கீதை என்பது ஒரு பொதுவானா நூலா? இந்துக்களின் புனித நூல் என்று சொல்லுவதுகூட மிகவும் பிழையாம். இந்துக்கள் என்று தங்களை பல பேர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள்தானே 80 சதவிகிதம் உள்ளனர். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங் கேற்கும்பொழுது, ஒரு வாசகர் தொலைப்பேசியில் என் னிடத்தில் கேள்வி கேட்கிறார், இந்துக்கள்தானே 80 சத விகிதம்; ஏன் அவர்களின் நூலை, இந்தியாவினுடைய தேசிய நூல் என்று ஏற்கக்கூடாது? என்று.
நான் அவரிடம் கேட்டேன், இந்துக்கள் 80 சதவிகிதம் என்கிறீர்களே, இந்துக்களில் சூத்திரர்கள் எத்தனை சதவிகிதம்? தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தனை சதவிகிதம்? பஞ்சமர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லோரும் சமமாக இந்துக்களில் மதிக்கப்படுகிறார்களா? எல்லோருக்கும் கோவில் கருவறைக்குள் போவதற்கு அனுமதி உண்டா? நீங்கள் இந்துக்கள் என்று சொல்லுகின்றவர்கள் 80 சதவிகிதம் என்று சொல்லுகிறீர்களே, 80 சதவிகித மக்களும் சமமாகக் கருதப்படுகின்ற இடம் ஏதேனும் ஒன்று உண் டென்று சொன்னால், அது வாக்குச் சாவடி மட்டும்தானே, நண்பர்களே!
வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்கள்
யாரும் கோவில் கருவறைக்குள்ளே வரக்கூடாது என்று சொல்பவனும்கூட, யாரும் வாக்குச் சாவடிக்குள் வராதே என்று சொல்வதில்லை. வாக்குச் சாவடிக்கு மட்டும்தான், எல்லோரையும் வருந்தி வருந்தி அழைக்கின்றார்களே தவிர, மற்ற இடங்களில் எல்லாம், கோவிலில், தெருவில் நிறுத்தப்படுகின்ற பொழுது, அதனை எப்படி நீங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு கணக்காக எடுத்துக்கொள்ள முடியும்.
கீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை; அது பார்ப்பனர்களுக்கான நூல்
எனவே, அடிப்படையில் வைக்கின்ற ஒரு கருத்தைத் தாண்டி, இன்னொன்றை நான் சொல்லுகின்றேன்; அடிப் படையாக சொல்லப்படுகின்ற செய்தி, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடென்றால், அப்படி மதச்சார்பற்ற நாட்டில், ஒரு மதத்தினுடைய நூலை, பொது நூலாக அறிவிக்கக் கூடாது என்பது. ஆனால், அதனைத் தாண்டி நாம் குறிப் பிட விரும்புகின்ற செய்தி, இது ஒரு மதத்திற்கும் பொது வான நூல் இல்லை. இது இந்து மதத்திற்கான நூல் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், அதனுடைய பொய் மையை நாமும் புகழ்ந்துவிடுகிறோம் என்று பொருள். இது இந்து மதத்திற்கான நூல் இல்லை. இது பார்ப்பனர்களுக் கான நூல்.
எனவே, மூன்று சதவிகிதமாக இருக்கின்ற பார்ப்பனர் களுடைய நூலை, 100 சதவிகித மக்களுக்கும் பொதுவான நூலாக ஆக்காதே என்பதுதான் நமது அடிப்படையான வாதம்.
கீதையைப்பற்றி விளக்கம் சொல்வதானால், இரண்டு வரிகளில் சொல்லலாம்.
அது, வருண அமைப்பை வலியுறுத்துகின்ற நூல்;
வன்முறையைத் தூண்டுகின்ற நூல்
இந்த இரண்டைத் தாண்டி, தத்துவக் குழப்பங்களைக் கொண்டிருக்கின்ற நூல்.
கீதாச்சாரத்தில் இருப்பது சீட்டுக் கம்பெனிகளுக்கு பொருத்தமானது
நான் வேடிக்கையாகச் சொல்லவில்லை. நான் செயலாற்றுகிறவனும் இல்லை; செயல் ஆற்றாமல் இருக்கின்றவனும் இல்லை என்று கண்ணன் சொல்கிறான்.
இதற்கு என்னடா, பொருள் என்றால், இதெல்லாம் தத்துவம், உங்களுக்குப் புரியாது என்கிறான்.
புரியாதவாறே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கேட்டால், உங்களுக்குப் புரியாது என்று சொல்கிறானே தவிர, இது தத்துவக் குழப்பங்கள், யோகம்பற்றி, சாங்கியம் பற்றி, பல்வேறு தரிசனங்கள் என்று சொல்லப்படுகின்ற தத்து வங்கள் பற்றியெல்லாம் உள்ளே ஏராளமான கருத்துகள் இருக்கின்றன.
எனவே, அதில் அடிப்படையாக இருக்கின்ற செய்தி இரண்டுதான். அவர்களைக் கேட்டாலே, அவர்கள் சொல்கின்ற செய்தி, மிகச் சுருக்கமாக, கீதையினுடைய அழுத்தமான சாரம் என்னவென்று கேட்டால்,
பயன் கருதா கருமம் என்பது கீதையின் சாரம்.
பயன் கருதா கருமம் என்பது கீதையின் சாரம்.
கீதாசாரம் என்று கடைகளில் எழுதிப் போட்டிருப் பதற்கும், கீதை புத்தகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கீதாச்சாரம் என்று எழுதியிருப்பதெல்லாம், எது நடந் ததோ, அது நன்றாகவே நடந்தது என்பது போன்றவை யெல்லாம் கீதையில் எங்கேயும் இல்லை.
அந்தக் கீதாச்சாரத்தில் இருப்பது, இந்தச் சீட்டுக் கம்பெனிகளுக்குத்தான் பொருத்தமானது; நேற்று வரைக் கும் உன்னுடையது யாருடையதாக இருந்ததோ, அந்தப் பொருள் நாளையில் இருந்து இன்னொருவனுடையது என்று சொல்கிறபொழுது, நீ போகும்பொழுதே, அந்தக் கடையிலுள்ள அந்த வரியைப் பார்த்திருக்க வேண்டுமல்லவா!
அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்!
அவன் தெளிவாகச் சொல்லிவிட்டானே, இன்றைக்கு வரைக்கும் உன்னுடையதான பொருள், நாளைக்கு இன் னொருவனுடைய பொருளாக ஆகிவிடும். நீ எதைக் கொண்டு வந்தாய்; கொண்டு போவதற்கு.
அய்யோ, நான் பணம் அல்லவா கொண்டு வந்தேன் என்று உனக்குத் தோன்றவேண்டும் அல்லவா!
எனவே, கீதாச்சாரம் என்பது அது அன்று; கீதாச்சாரம் பயன் கருதாத கருமம் என்பதுதான்.
அதை அவர்கள் இரண்டாவது இயலிலேயே அதனைச் சொல்லி விடுகிறார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால், தொடக்கத்தில் சொல்கிற பொழுது, அந்தப் பயன் கருதா கருமம் என்பது; கருமம் என்றால் என்ன என்பதற்கான விளக்கம் நான்காவது இயலில் வெளிப்பட்டு, 18 ஆவது இயலில் முற்று பெறுகிறது.
ஆனால், சொல்கிறபொழுது, இரண்டாவது இயலில், பயன் கருதா கருமம்; அதுதான் கீதையினுடைய சாரம். இரண்டாவது இயலிலேயே இருக்கிறது.
கடமையைச் செய்வதுதான் உன்னுடைய நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தக் கடமைக்கான பயன் களை நீ எதிர்பார்க்கக்கூடாது. இதைத்தான் திரும்பத் திரும்ப, அடடா, எத்தனை உத்தமமான கருத்து என்று சொல்கிறார்கள்.
நான் முதலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றை சொல்லவேண்டும்; அவர்தான் கீதையைப்பற்றி நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள்!
The Bhagavad Gita என்பதில் இருந்து தொடங்கி, The Indian Philosophy என்பதிலிருந்து,The Source of Indian Philosophy என்கிற புத்தகமும், Eastern Religions Western Thought என்கிற புத்தகமும், எல்லாவற்றிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கின்ற அந்த வரலாற்றுக் குறிப்புகளை நாம் எடுத்துக்கொண்டாலும்கூட, காரணம், அம்பேத்கர் சொல்கின்ற செய்தியை நாம் ஏற்கவேண்டாம்; அய்யா பெரியார் சொல்கின்ற கருத்தை நாம் ஏற்கவேண்டாம்; அவர்களுடைய வரலாற்று ஆசிரியர் டி.ஜி.திலகர் சொல்லுவதைக்கூட ஏற்கவேண்டாம். நீங்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லுகின்ற அந்தக் கூற்றை எடுத்துக்கொண்டாலும், ஏசு நாதருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கீதை எழுதப்பட்டிருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் The Bhagavad Gita என்கிற புத்தகத்தில் சொல்கிறார்; அதனை உண்மை என்று வைத்துக்கொண்டாலும், 2500 ஆண்டுகள்தான். ஆனால், இவர்கள் 5151 என்று புதிதாக ஒரு புருடாவை விடுகிறார்கள். வாய்க்கு வந்ததை வரலாறு என்று சொல்கிறார்கள்.
எனவே, அப்படி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொல்லு கின்ற அந்தப் புத்தகத்திலே அவர் குறிப்பிடுவது, அதனு டைய சாரம் என்பதே, எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று ஒரு பொதுநலத் தொண்டுபோல அதனைக் காட்டுகிறார்.
சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை!
ஒவ்வொன்றிற்கும் இவர்கள் எழுதியிருக்கின்ற விளக்க உரை இருக்கின்றதே, இன்றைக்கு அய்கான் என்கிற அந்த நிறுவனத்திலிருந்துதான், மிகக் கூடுதலான மொழிகளில், அவர்களுடைய பிரபு மகனார் எழுதிய உரைகளோடு, பல்வேறு மொழிகளில் கீதை மொழி பெயர்க்கப்பட்டு, நாம் இங்கே சிறப்புக் கழிவு விலைகளில்தான் கொடுக்கின்றோம் கீதையின் மறுப்பு நூலினை. ஆனால், அவர்கள் சும்மாவே கொடுக்கின்றார்கள். நான் இணைய தளத்தில் பார்த்த பொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை மொழிகளில் அவர்கள் மொழி பெயர்த்து கீதையைக் கொண்டு போயிருக்கிறார்கள். உலகில் உள்ள பல்வேறு மொழிகளில், அதனை மொழி பெயர்த்து, எல்லா மொழி பெயர்ப்புகளிலும் அவர்கள் முன்னுரையில் சொல்லியிருக் கின்ற செய்தி, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நூல் இதுதான் என்று.
வைணவத்தினுடைய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள்
இதனை பகுத்தறிவாளர்கள் ஏற்கிறோமா, இல்லையா? கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தினைச் சார்ந்தவர்கள் ஏற்கி றோமா, இல்லையா? என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்து மதம் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற சைவர்கள் ஏற்கிறார்களா? என்று கேட்டுச் சொல்லுங்கள். வைணவத்தினுடய நூல்தான் கீதை. அதனை சைவர்கள் கூட ஏற்கமாட்டார்கள். எனவே, அப்படிப்பட்ட அந்த நூலில், பயன் கருதா கருமம்; எதையும் எதிர்பார்க்காமல் இந்த உலகத்தினுடைய நன்மைக்காக உழைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது என்று இரண்டாவது இயல் சொன்னால், நான்காவது இயலில் அதற்கு இன்னொரு விளக்கம் இருக்கிறது. இந்தக் கருமம் என்பது, அவரவர் வருணத்திற்கு உரியது. வருணம் என்பது நான்கு. அந்த நான்கு வருணங்களை நான்தான் படைத்தேன்.
சதுர் வருணம் மயாசிருஷ்டம்
அந்த நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன். அதற்கு நம்முடைய உண்மை இதழில் எழுதியிருப்பது போல, அதற்கொரு வெண்டைக்காய் வியாக்கியானம் வைத்திருக்கிறார்கள்.
இந்த நான்கு வருணம் என்றால், அது குண தருமங் களைப் பொறுத்தது. அடுத்த வரியில் இருக்கிறது.
நான் ஒலிநாடாவில் கேட்டேன், சுகிசிவம்கூட அந்த விளக்கத்தைச் சொல்கிறார்.
நான்கு வருணம் என்பது பிறப்பினால் இல்லை; அது குண தரும, சுபாவம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டிருக் கிறது. அது குணத்தையும், அவரவருடைய செயலையும் ஒட்டி பிரிக்கப்பட்டிருக்கிறது.
மறுபடியும் தொடர்ந்து படித்துக்கொண்டே போனால், 9 ஆவது அத்தியாயத்திலே ஒரு செய்தி இருக்கிறது. நான் குறிப்பிடுவதற்குக் காரணம், இப்பொழுதெல்லாம் புத்தகங் களைத் தேடுவதில் மிகப்பெரிய சிரமமில்லை. இணைய தளத்திற்குள் சென்றால், பகவத் கீதையை உடனே படித்து விடலாம்.
Comments
Post a Comment