பகுத்தறிவு


கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்!


  • திட்டமிட்ட மனித முயற்சியால் ஃபாலின் புயல்  கொடுமையிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர்
  • பக்தி மூடநம்பிக்கையால் ம.பி.யில் 120-க்கும் மேற்பட்டோர் பலி!
கடவுளை மற மனிதனை நினை என்பதற்கு
இவ்விரண்டும் பொருத்தமான எடுத்துக்காட்டுகள்!


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/mar/19/29.jpg
ஒடிசாவின் கடும் புயலிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டது மனிதர்களின் முயற்சி; மத்தியப் பிரதேசத்தில் கோயில் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் - முன்னது மனித முயற்சியால் மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டன; பின்னது கடவுள் நம்பிக்கையால் பக்தர்கள் பரிதாபகரமாக மாண்டனர்; கடவுளை மற - மனிதனை நினை என்ப தற்கான எடுத்துக்காட்டுகள் இவை என்று சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

கடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்!

கடந்த 12.10.2013 அன்று மாலை 6 மணியளவில் ஒடிசா  மாநிலம் கோபால்பூர் அருகே வங்கக் கடலில் மய்யம் கொண்டிருந்தது ஃபாலின் என்று பெயர் சூட்டப்பட்ட புயல்! கடல் சீற்றத்துடன் 3ஙூ அடி முதல் 5 அடி வரை   அலைகளை எழுப்பிய புயல் தரையின்மீது இறங்கி வீசியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கக் கூடும்; இதுவரை வீசிய புயல்களிலேயே இதுதான் மிகவும் கடுமையான தாகவும், கொடுமையானதாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப் பட்டது.

பாராட்டத்தக்க தகுந்த முன்நடவடிக்கைகள் ஒடிசாவின் கோபால்பூர், பாரதீவ் துறைமுகம் பகுதி மட்டுமல்ல; ஆந்திராவின் சிறீகாகுளம், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளும், பக்கத்து மாநிலங்களான ஜார்கண்ட், சத்தீஸ்கர் - மேற்குவங்கப் பகுதிகளிலும் இதன் தாக்கம் இருக்கக் கூடும் என்று மத்திய, மாநில அரசுத் துறைகளால் அறிவிக்கப்பட்டது.

புயல் தரையைக் கடக்கும் முன்பே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - வரலாறு காணாத வகையில் மத்திய அரசின் தேசிய பேரிடர் தடுப்பு அமைப்பு மற்றும் இராணுவம், காவல்துறை, நிர்வாகத் துறைகளும் இணைந்து, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தீயணைப்புத் துறை போன்ற பல்வேறு துறையினரின் ஒருங்கிணைப்பை அற்புதமாகச் செய்தன.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆயத்தமான நிலையை அரசு அதிகாரிகளும் மத்திய அரசு, ஒடிசா அரசு, ஆந்திர அரசு - எல்லாம் ஒருங்கிணைந்து செய்தன.

ஊடகங்களும், தொலைக்காட்சிகளும்கூட மக்களுக் குப் போதிய எச்சரிக்கையை விடுத்தன.

நான்கரை லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்

இதுவரை கேள்விப்பட்டிராத அளவில் ஒடிசா மாநிலத்தில் கடற்கரை ஓரப் பகுதியில் வாழும் சுமார் 4ஙூ லட்சம் பேர்களை குழந்தை குட்டிகளுடன் பாதுகாப்பான பகுதிகளுக்கு, இடம் பெயரச் செய்தனர்; உணவு, குடி தண்ணீர் முதலியவற்றையும் அவர்களுக்கு அளித்தனர்!

ஆந்திராவிலும், சிறீகாகுளம், விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய பகுதியிலும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இடம் பெயரச் செய்து பாதுகாத்தனர்.

மொத்தம் 5ஙூ லட்சம் பேர்களை - சில நாள்களில் அவசரமாக இடம் பெறச் செய்துள்ள இது நம் நாட்டு வரலாற்றில் மிகப் பெரிய வியக்கத்தக்க சாதனையாகும்.

ஏழை, எளிய மக்கள் எளிதில் தங்கள் வீடுகள் குடியிருப்புகளை - அவை குடிசைகளானாலும் அவற்றை விட்டு வர சம்மதிக்க மாட்டார்கள்; இதனை உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அவர்கள் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் இதுபற்றி மேற்பார்வையிட்டதும் ஒடிசா முதல் அமைச்சர் நவீன்பட்நாயக்கும், ஆந்திரா முதல்வர் கிரண்ரெட்டியும், அவர்களது அரசு  அதிகாரிகளும் சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

210 மைல் வேகத்தில் வீசிய புயல்

200 முதல் 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கொடும் புயல் காரணமாக, இதுவரை பல்லாயிரக்கணக் கில் ஏற்பட்டிருக்க வேண்டிய சேதம், வெறும் 23 பேர் உயிர்ப் பலியோடு முடிந்தது. (அந்த 23 உயிர்களும்கூட பாதுகாக்கப்பட வேண்டிய விலை மதிப்பற்ற மனித உயிர்கள்தான்!) என்றாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதுபோல நடந்து, நிவாரணப் பணிகள் முழு வீச்சில் அங்கே இப்போது நடந்து கொண்டுள்ளன. பர்காம்பூர், புவனேஸ்வர் முதலிய நகரங்களிலும் ஆந்திராவிலும் சகஜ நிலை திரும்பிக் கொண்டுள்ளது.

கோயில் திருவிழாவில் பக்தர்கள் பலி!

இந்த நிலையில் மத்திய பிரதேசம் தாதியா மாவட்டத்தில் ரத்தன்கர்  கோயில் திருவிழாவில் கூடிய 5 லட்சம் பேருக்கு மேல் உள்ள கூட்டத்தினர் மத்தியில் பாலம் விழப் போகிறது; அதற்குமுன் கடந்து விடுங்கள் என்ற ஆதாரமற்ற வதந்தியை, பொய்ச் செய்தியைப் பரப்பியதன் விளைவாக மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிய நெரிசல் காரணமாக சுமார் 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்துள்ளனர். சுமார் 250 பேருக்கு மேல் படுகாயப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்!
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது; ஹிந்துத்துவாவை முன்னிறுத்தும் கட்சியினர் ஹிந்துக்கள் கூடிய திருவிழாவில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதினால் இந்த வேதனையும், துயரமுமான கோர மரணங்கள் நிகழ்ந் துள்ளன!

உத்தரகாண்டில் நடந்தது என்ன?

வருமுன்னர் காப்பதே அறிவுடைமை; ஆளும் திறன் ஆகும்.
பக்தி மூடத்தனத்தின் விளைவாக உத்தரகாண்டில் ஏற்பட்ட புயல் வெள்ளம், மழை காரணமாக பல்லாயிரக் கணக்கில் வீடுகள், ஓட்டல்கள் இடிந்து, யாத்திரீகர்கள், பக்தர்கள் இறந்தனரே சில மாதங்களுக்கு முன்பு!
சரியான வானிலை எச்சரிக்கைத் தரப்படாததே காரணம் என்று கூறப்பட்டது.
இது எதைக் காட்டுகிறது? இதன் அறிவார்ந்த படிப்பினைதான் என்ன?
உயிர்கள் - பக்தர்கள் உயிரானாலும், பகுத்தறிவா ளர்கள் உயிரானாலும் காப்பாற்றப்பட வேண்டிவை களேயாகும்; ஆனால் கடவுள் நம்மைக் காப்பார்  என்றும் கடவுள் கருணையே வடிவானவர் என்றும் கூறுவது எத்தகைய அறியாமையில் வடித்தெடுத்த மூடநம்பிக்கை என்பதை மக்கள் உணர வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும்

கடவுள் கருணையே வடிவானவராக இருப்பின் இப்படி மக்களை அதுவும் திருவிழாவிற்கு கும்பிட வந்தவர்களை பலி வாங்குவானா?

அதைவிட, சர்வ சக்தி வாய்ந்தவனாக இருப்பின் புயல் போன்ற விபத்துக்கள் போன்றவை ஏற்படாமலேயே தடுத்திருக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும்;
புத்தி வந்தால் பக்தி போகும் என்ற

தந்தை பெரியாரின் அறிவு மொழியை மக்கள் சிந்தத்தால் தான் வளர முடியும்.
கடவுளை மறந்து, மனித முயற்சிகள் காரணமாக பெரும் புயல் காரணமாக பல லட்சம் மக்கள் காப்பாற்றப் பட்டனர்; பக்தி செய்ய முடியாததை புத்தி செய்து காட்டியுள்ளது.

இனியாவது பக்திப் போதையிலிருந்து பக்தர்களே, விடுபடுங்கள்: முயற்சியும் உழைப்பும் தான் நம்மை வாழ வைக்கும் என்பதை உணருங்கள்.
 
-----------------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை   14.10.2013

Comments

Popular posts from this blog

மன்மத குருக்கள்

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

திமுகவும் ஈழப்போரும்