சைவம் பேசும் ஓநாய்!
ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?
ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013).
அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே மிகவும் நீட்டி முழங்கியுள்ளார். ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் அமைதியுடன் வாழ விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்கள் எல்லாம் நீண்ட வரிசையில் நின்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் மனு கொடுத்திருப்பார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
பேரழிவுக்குப்பிறகு அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு, மறு சிந்தனை கொள் வதற்கு உகந்த வகையில் அதிபர் ராஜபக்சே அப்படி என்ன என்னவெல்லாம் தமிழர்களின் அமைதிக்கும், சுதந்திரமான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செய்துள்ளார் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருந்தால்கூட, ஏதோ தம் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்றுகூட நினைக்கத் தோன்றும்.
மூன்றே மாதங்களில் முள்வேலி முகாமி லிருந்து, ஈழத் தமிழர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி, சொந்த வீடுகளில் குடியமர்த்தம் செய்வோம் என்றாரே - அதன்படி ஏதாவது நடந்திருக்கிறதா? தமிழர்களுக்குரிய பூர்வீக வீடுகளை எல்லாம், நிலங்களை யெல்லாம் சிங்களக் காடையர்கள் அல்லவா ஆக்கிரமித்துள்ளனர்.
அதைவிடப் பெரிய கொடுமை - தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களமயமாக்கப் பட்டு விட்டதே - இன்னும் அந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன.
பத்திரிக்கை சுதந்திரம் உண்டா? வெளியுலக ஊடகக்காரர்களை அனுமதிக்காதது - ஏன்?
சண்டே லீடர் ஆசிரியர் வசந்த் பட்டப் பகலில் நடுவீதியில் சுடப்பட்டது எந்த நோக்கத்துக்காக? இந்த வரிசையில் பாசிச ஆட்சிக்கே உரித்தான போக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நீண்ட பட்டியல் உண்டே!
எத்தனை ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்? அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்?
எத்தனை எத்தனை ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம்? உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிட, 2011 ஆகஸ்டில் அவசர நிலையை ரத்துச் செய்ததாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அவசர நிலைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை அதிகாரங்களும் இதற்குள்ளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். மறுக்க முடியுமா? போர்க் குற்றங்கள்பற்றி இலங்கை அரசே விசாரிக்கும் என்று மனித உரிமை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து, எந்தவித உரிமை மீறலும் இலங்கையில் நடைபெறவில்லை என்று இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிவித்து விடவில்லையா?
அதே போன்றதுதான் இப்பொழுது ராஜபக்சே வெளிப்படுத்தியிருக்கும் கூற்றும்.
அவர் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.
சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கத் தயார் தானா?
இலங்கை அதிபராக சிங்கள மொழி பேசும் - பவுத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர்தான் அதிபராக முடியும் என்பதை விலக்கிக் கொள்ளத் தயாரா?
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று முன்பு கொடுத்த உத்தரவாதத்தைச் செயல்படுத்த முன்வருவாரா?
குறைந்த பட்சம் இந்த மூன்று அம்சங்களுக் காவது பச்சைக் கொடி காட்டட்டும்; அதற்குப் பிறகு - ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்கள் என்பதைப் பேச முயற்சிக்கட்டும்!

Comments
Post a Comment